search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை- போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகி அறிவிப்பு
    X

    ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை- போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகி அறிவிப்பு

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மத்திய தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு நாளை கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி நாளை சென்னை தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த இரு முடிவுகளையும் பொறுத்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இருதரப்பினரும் தெரிவித்தனர். இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகம் எங்களது புதிய கோரிக்கைகளை நிறைவேற்ற தயங்குகிறது. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    Next Story
    ×