

தென்காசி:
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று வெளியாகியது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், சுரண்டை, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தியேட்டர்களில் திரைப்படத்தை காண ரசிகர்கள் திரண்டனர்.
தென்காசி பி.எஸ்.எஸ். மல்டிபிளக்ஸ் தியேட்டரில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ரசிகர்களுக்கு இனிப்புடன் வழங்கி தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செல்லத்துரை, மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட நற்பணி மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் சிவ.அருணன் தனது சொந்த செலவில் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை தியேட்டரில் கொண்டு வந்து நிறுத்தினார்.
ரசிகர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுடன், ஒவ்வொரு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. ஜூன் 2-ந்தேதி வரை படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்த டோக்கன் வினியோகம் செய்யப்படும்.
கருணாநிதியின் பிறந்தநாளான வருகிற ஜூன் 3-ந்தேதி குலுக்கல் நடைபெற உள்ளது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் ரசிகருக்கு புதிதாக தியேட்டர் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து மாவட்ட துணைசெயலாளர் அருணன் ஏற்பாட்டில் ஆலங்குளத்தில் உள்ள டி.பி.வி. மல்டி பிளக்ஸ் தியேட்டரில் 150 டிக்கெட்டுகள் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் வெளியான ‘’நெஞ்சுக்கு நீதி’’ திரைப்படத்தின் முதல் காட்சியை மாநில தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் தொடங்கி வைத்தார்.
மேளதாளங்கள் முழங்க ரசிகர்களுடன் இணைந்து மாநில தி.மு.க. இளைஞரணி துணைச்செயலாளர் ஜோயல் கேக் வெட்டினார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.