என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து பெண் துறவி பலி
- சென்னையில் இருந்து கூடங்குளம் பகுதிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் மீது மோதியது.
- விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்கு சமண துறவிகள் 7 பேர் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு செல்வதற்காக நான்கு வழிச்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த ஆழ்வார்குளம் விலக்கு பகுதியில் இன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் அவர்களது உடமைகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி வேன் ஒன்று கூட்டத்தின் பின்னால் சென்று கொண்டிருந்தது.
அப்போது சென்னையில் இருந்து கூடங்குளம் பகுதிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் மீது மோதியது.
இதனால் ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற துறவிகள் மீது மோதியது. இதில் பெண் துறவிகளான ருசிலா ஸ்ரீஜி (வயது 63), தீன் தயாள் (33) உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனைப் பார்த்தவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ருசிலா ஸ்ரீஜி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்டம் முளகு மூடு பாறைக்கோடு வடலிவிளை பகுதியை சேர்ந்த ஜான் சுந்தர் சிங் (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






