search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் நில புரோக்கரை குத்தி கொன்றது பிரபல ரவுடி
    X

    நாகர்கோவிலில் நில புரோக்கரை குத்தி கொன்றது பிரபல ரவுடி

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • சுபினை கைது செய்தால் தான் கொலைக்கான முழு காரணமும் தெரிய வரும்.

    நாகர்கோவில்:

    கருங்கல் கப்பியறை புதுக்காடு செட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாபு (வயது 57), நில புரோக்கர்.

    இவரது மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 2 மகள்கள் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். தற்போது சேவியர் பாபு நாகர்கோவில் பார்வதிபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    சேவியர் பாபு நேற்று மதியம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நெடுஞ்சா லைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே தனது நண்பர் செல்வ ராஜுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் சேவியர் பாபுவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த செல்வராஜுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சேவியர்பாபு சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலையாளி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். மேலும் பேக் ஒன்றும் சிக்கியது. அந்த பேக்கில் உணவுப்பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    எனவே சேவியர் பாபுவை கொலை செய்தது உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் என்பது தெரிய வந்தது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது சேவியர் பாபுவை கொலை செய்தது ராணி தோட்டம் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் 33 என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுபினை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த சுபின் தலைமறைவாகி விட்டார்.

    சுபின் மீது ஏற்கனவே நேசமணி நகர் வடசேரி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலிலும் சுபின் பெயர் இடம் பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சுபின் உணவு டெலிவரி நிறுவனத்தில் இருந்து உணவுப் பொருட்களை சப்ளை செய்ய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.அப்போது சேவியர் பாபு, செல்வராஜ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சுபின், சேவியர் பாபுவை கத்தியால் குத்திருப்பது தெரிய வந்துள்ளது. சுபினை கைது செய்தால் தான் கொலைக்கான முழு காரணமும் தெரிய வரும்.

    Next Story
    ×