

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்ற தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்களா? என்பதை அறிய முடியாமல் மகள் சுனந்தா பதட்டமானதும், தோழியை வீட்டுக்கு அனுப்பி பார்க்க சொன்னதுமே இந்த வழக்கில் கொலையாளி உடனடியாக சிக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதிகாலை 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அமெரிக்காவில் இருந்தபடியே தனது பெற்றோருக்கு என்ன ஆனதோ? என்று நினைத்து சுனந்தா பதறியது பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பெற்றோரிடமிருந்து ஊருக்கு வந்து விட்டோம் என்று தகவல் வராததால் அவர்களது செல்போனுக்கு சுனந்தா போன் செய்துள்ளார்.
இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. டிரைவர் கிருஷ்ணாவும் போனை எடுத்து சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுனந்தா, அடையாறு இந்திரா நகரில் உள்ள தனது தோழி திவ்யாவுக்கு போன் செய்து அப்பா, அம்மா இருவரும் சென்னை சென்று விட்டார்களா? என்பது தெரியவில்லை. வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு சொல்லவும் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து திவ்யா தனது கணவர் ரமேசுடன் மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்த போது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அப்போது மதியம் 12.30 மணி ஆகி விட்டது. காலை 6 மணியில் இருந்தே பெற்றோரை பற்றி எதுவும் தெரியாமல் இருந்ததால் சுனந்தா, வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதன்படி திவ்யா தனது கணவர் ரமேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாரத்த போது ஸ்ரீகாந்தும், அனுராதாவும் அங்கு இல்லை. இதன் பிறகே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் உடனடியாக விசாரணையை முடுக்கி விட்டனர். இதுபற்றி தெரியவந்ததும் கமிஷனர் சங்கர் ஜிவால் உடனடியாக இருவரையும் கண்டு பிடிக்க உத்தரவிட்டார்.
முதலில் இருவரையும் டிரைவர் கிருஷ்ணா கடத்தி சென்றிருக்கலாம் என்றே போலீசார் கருதினார்கள். அந்த கோணத்திலேயே விசாரணையும் முடுக்கி விடப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சுங்கச்சாவடி அருகே வைத்து டிரைவர் கிருஷ்ணாவை போலீசார் மடக்கி பிடித்த பிறகுதான் ஸ்ரீகாந்த் அனுராதா இருவரும் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியில் தெரிய வந்தது.
இதையடுத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கவுதமன் தலைமையிலான போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இதன் பிறகே கொள்ளை கொலை வழக்கில் முழுமையாக துப்பு துலங்கி திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தொழில் அதிபர் ஸ்ரீகாந்தையும், அவரது மனைவி அனுராதாவையும் கொலை செய்து விட்டு காரில் தப்பிய டிரைவர் கிருஷ்ணா 500 பவுன் நகைகளுடன் காரில் தப்பியது தெரிய வந்துள்ளது. இந்த நகைகள் அனைத்தையும் போலீசார் அப்படியே கைப்பற்றி இருக்கிறார்கள்.
கார் டிரைவர் கிருஷ்ணா. தொழில் அதிபர் ஸ்ரீகாந்தின் நம்பிக்கைக்கு பாத்திரமான நபராகவே இருந்துள்ளார். மகன் போல இருந்தவன் இப்படி எமனாக மாறி விட்டானே? என்று அவரது உறவினர்கள் போலீசிடம் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அவனா இப்படி? என்றும் தெரிவித்துள்ளனர்.