திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- 2 பேர் கவலைக்கிடம்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
திண்டிவனம் விபத்து
திண்டிவனம் விபத்து
Published on

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை சர்வீஸ் சாலை தொடங்கும் இடத்தில் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு நூல் பண்டல்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி பழுதானது. இதனை சாலையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் லாரி டிரைவர் ஈடுபட்டார்.

அப்போது மரக்காணம் அருகே பெருமுக்கல் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்ற 2 வாலிபர்கள் ஜக்காம் பேட்டை சாலை வளைவில் நிலைதடுமாறி பழுதாகி நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதினர்.

இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் ஒருவரது தலை லாரி மீது மோதியதில் பலத்த அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். மற்றொரு இளைஞர் சுயநினைவின்றி கிடந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (வயது 38), தமிழ்ச்செல்வன் (17) என்பது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com