என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 மகள்களை கொன்று தாய் தற்கொலை
2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- கணவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை
- சபீனா தான் இறப்பதற்கு முன்பாக ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார்.
- நாங்கள் 3 பேரும் சந்தோசமாக சொர்க்கத்தில் இருப்போம் என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பழனி:
பழனி தட்டான்குளம் பாண்டியநகரை சேர்ந்தவர் பர்கான்(42). ஓய்வு பெற்ற ராணுவஅதிகாரியான இவர் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சபீனா(37). இவர்களது மகள்கள் ஷனா(13), யமீனா(11). 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.
சபீனா பழனியில் ஒரு பேக்கரி கடை நடத்தி வந்தார். நேற்று மாலை வரை இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சபீனா தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சபீனா தான் இறப்பதற்கு முன்பாக ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனவே என்னுடன் எனது குழந்தைகளையும் அழைத்துச்செல்கிறேன். நாங்கள் 3 பேரும் சந்தோசமாக சொர்க்கத்தில் இருப்போம் என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர் வீட்டிற்கு வந்தார். அவர் இறந்த தனது மனைவி மற்றும் மகள்களின் உடலை பார்த்து கதறி அழுதார். இறப்பதற்கு முன்பாக தனது மகள்கள் 2 பேருக்கும் விஷம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு சபீனா இறுதிச்சடங்கு செய்திருந்தார். இவர்கள் சாவுக்கு யார் காரணம் என்பது குறித்து கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கணவன்-மனைவி இடையே ஏதேனும் பிரச்சினை உள்ளதா என கேட்டறிந்தனர். பேக்கரியில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சபீனாவின் செல்போனை பறிமுதல் செய்து அதில் வேறுயாரேனும் மிரட்டல் விடுத்தனரா என்பது குறித்தும் யாருடன் அதிகநேரம் பேசியிருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






