கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தையை கொன்ற தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து தீர்த்துக்கட்டிய தாயை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். எனவே கார்த்திக் நித்தீசுடன் கோவையிலும், கீதா தனது 2-வது குழந்தை நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே அந்த குழந்தையை கீதா ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணமாகி, அவர்களை விட்டு பிரிந்தது தெரியவந்தது. அத்துடன் சமூகவலைத்தளம் மூலம் 3-வதாக கார்த்திக்குடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து உள்ளார்.

அவர் மூலம்தான் 2 குழந்தைகள் பிறந்து உள்ளன. பின்னர் கார்த்திக்கை பிரிந்த கீதாவுக்கு மேலும் பலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், அவர் தனது குழந்தையை சரிவர பராமரிக்காமல் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கீதாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் கீதாவை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக கீதா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

3-வது கணவரை விட்டு பிரிந்த கீதாவுக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்து உள்ளார். எனவே அவரால் குழந்தையை சரியாக பராமரிக்க முடியவில்லை. அத்துடன் கள்ளக்காதலுக்கு அந்த குழந்தை இடையூறாகவும் இருந்து உள்ளது. எனவே குழந்தையை கொல்ல கீதா முடிவு செய்து உள்ளார். போலீசில் சிக்காமல் குழந்தையை கொலை செய்ய யோசித்தார். அப்போதுதான் அவர் தனது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து உள்ளார். அத்துடன் மதுபானமும் கொடுத்து உள்ளார்.

இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் எதுவும் தெரியாததுபோன்று அவர் குழந்தையை தூக்கியபடி அழுதுகொண்டே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று நாடகமாடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com