search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைச்சர் சேகர்பாபு
    X

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைச்சர் சேகர்பாபு

    • சேகர்பாபுவும் வந்தோமா.... சாமி கும்பிட்டோமா... என்று போயிருந்தால் பக்தர்கள் மனதில் இடம் பிடித்து இருக்க மாட்டார்.
    • கடைசி பக்தரும் தரிசனம் செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு சன்னதியில் சென்று சிறிது நேரம் தரிசித்தார்.

    பகவானை தரிசித்து பரவசப்பட வந்த பக்தர்கள் அமைச்சரை பார்த்து பரவசப்பட்ட ருசிகர சம்பவம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்தது.

    வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பார்த்தசாரதி கோவிலிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்து காட்சி தரும் பெருமாளை தரிசிக்கவும் அவரை பின் தொடர்ந்து அதே வாசல் வழியாக சென்று தரிசித்து பலன் அடையவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நள்ளிரவிலேயே குவிந்த பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்து கிடந்தது. அறநிலையத்துறையின் கணக்குப்படி முற்பகல் வரை தரிசித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று தெரியவந்துள்ளது.

    சொர்க்க வாசல் திறக்கும் போது கூட்டம் முண்டியடிக்கும். எனவே மாலையில் போகலாம் என்று காத்திருந்தவர்கள் பிற்பகலில் கோவிலில் திரள தொடங்கினார்கள்.

    நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கரை புரண்டது. வரிசையும் நீண்டு கொண்டே சென்றது.

    செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் தனித்தனி வழிகளில் சென்று வந்தார்கள்.

    ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறந்ததும் ரங்கநாதரை தரிசித்து திரும்பிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...

    பார்த்தசாரதியையும் பார்த்து தரிசித்து வர காரில் வந்து இறங்கினார்.

    மாலை 6.... கூட்டத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடன் இருந்த அதிகாரிகளிடம் 'யோவ்.....என்னய்யா இப்பவும் லட்சக்கணக்கில் கூட்டம் நிற்கிறது... சொர்க்க வாசல் காலையிலேயே திறக்கப்பட்டிருக்கும் அல்லவா? என்றார்.

    அதற்கு "ஆமா சார்.. தரிசனத்துக்காகத்தான் காத்திருக்கிறார்கள்." என்றனர்.

    அமைச்சரை பொறுத்தவரை எந்த இடையூறும் இல்லாமல் பத்திரமாக அதிகாரிகள் சாமி சன்னதி வரை அழைத்து சென்று விடுவார்கள். நிம்மதியாக சாமி தரிசனம் செய்து விட முடியும்.

    சேகர்பாபுவும் வந்தோமா.... சாமி கும்பிட்டோமா.. என்று போயிருந்தால் பக்தர்கள் மனதில் இடம் பிடித்து இருக்க மாட்டார்.

    ஆனால் அவரோ கோவில் பிரதான வாசல் முன்பிருந்து 'கியூ' எதுவரை நிற்கிறது என்று பார்ப்பதற்காக விறுவிறு என்று நடக்க தொடங்கினார். 4 வீதிகளையும் சுற்றி பார்த்து மலைத்து போனார். கூட்டம்.. கூட்டம்... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கூட்டம்.

    கியூ இப்படியே ஆமை வேகத்தில் நகர்ந்தால் ஒரு நாள் கூட ஆகலாம் என்று கருதியவர் மீண்டும் முன் வாசலுக்கு விறுவிறு என்று நடக்க தொடங்கினார்.

    வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் "சார்... 2 மணி நேரமாக நிற்கிறோம்.... 3 மணி நேரமாக நிற்கிறோம் என்று பரிதாபமாக கூறினார்கள். கை குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள்.

    கோவில் முன்பு வந்த சேகர்பாபு வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரைகளுடன் தரிசனத்துக்கு வந்தவர்கள் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டதை பார்த்தார். உடனடியாக அவற்றை தடை செய்ய சொன்னார்.

    அடுத்ததாக மீண்டும் வரிசையாக நின்ற பகுதிக்கு சென்று பக்தர்களை அவரே ஒழுங்குபடுத்தினார். அந்த கூட்டத்தில் முதியோர்கள், கைக்குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளை பார்த்து விரைவாக செல்ல ஏற்பாடு செய்தார்.

    அதன் பிறகு கூட்டம் கொஞ்சம் வேகமாக நகர தொடங்கியது. பின்னர் சன்னதி அருகே வந்து மாற்றுதிறனாளிகள், பெரியவர்கள், கைக்குழந்தையுடன் வந்த பெண்களை மட்டும் சுமார் 1 நிமிடம் வரை சுவாமி முன்பு நின்று தரிசித்து செல்ல ஏற்பாடு செய்தார்.

    அதன் பிறகும் வேலை முடிந்தது கிளம்பலாம் என்று நினைக்கவில்லை. கோவிலை சுற்றி நடந்த படியே வரிசையாக நின்றவர்களை பார்த்து ம்ம்.. நகருங்க... நகருங்க.. என்று விரைவாக அனுப்பிக் கொண்டே இருந்தார்.

    சரியாக மாலை 6 மணிக்கு நின்றவர் உட்காராமல் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டே இருந்தார். இரவில் பனி கொட்ட தொடங்கியபோது கொட்டிய பனியிலும் அசையாமல் பெருமாளை தரிசித்தே செல்ல வேண்டும் என்று பக்தர்கள் பிடிவாதமாக வரிசையில் நின்றது போல் கடைசி பக்தர் வரை பெருமாளை பார்த்த பிறகே தானும் இங்கிருந்து செல்வேன் என்று அங்கேயே நின்றார் அமைச்சரும்.

    சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு அதாவது அதிகாலை 2 மணிக்கு அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்து முடித்தனர். கடைசி பக்தரும் தரிசனம் செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு சன்னதியில் சென்று சிறிது நேரம் தரிசித்தார். " உன் பக்தர்களை எல்லாம் விரைவாக உன்னைக்காண அனுப்பி வைத்து விட்டேன்" என்று சொல்லி இருப்பாரோ...?!

    பின்னர் நடை சாத்தப்பட்டதும் ஊழியர்களிடம் விடைபெற்று புறப்பட்டார். பக்தர்கள் பலர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    8 மணி நேரம் உட்காராமல் நின்று கொண்டிருக்க சிரமம் இல்லையா என்று கேட்டதற்கு "சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க முன்பெல்லாம் இதை விட கூடுதலான நேரம் காத்து நின்று இருக்கிறேன். எனவே பகவான் பாதபலத்தை தந்திருக்கிறார்" என்றார் சிரித்த படியே....

    Next Story
    ×