டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கவியரசி திடீரென வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை
Published on

மேட்டூர்:

மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக் குட்டையை சேர்ந்தவர் சக்திவேல், கூலித் தொழிலாளி. இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி (13), பிரபா (9) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

நங்கவள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவியரசி 7-ம் வகுப்பும், பிரபா 5-ம் வகுப்பு படித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் இருவரும் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது கவியரசி திடீரென வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியினர் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவியரசியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சகோதரிகள் இருவருக்கும் இடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில கவியரசி டி.வி. ரிமோட்டை உடைத்து விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com