search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் மெக்கானிக் கொலை: பிளஸ் 2 மாணவர்- 5 சிறுவர்கள் கைது
    X

    மதுரையில் மெக்கானிக் கொலை: பிளஸ் 2 மாணவர்- 5 சிறுவர்கள் கைது

    • மெக்கானிக் கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் பழைய காலனி பகுதியை சேர்ந்த வீரய்யா என்பவர் மகன் பிரகாஷ் (வயது 21). இவர் பழங்காநத்தம் பகுதியில் செயல்படும் ஒரு ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. பிரகாசின் நண்பர்களான அவர்கள் முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதனை கண்ட பிரகாசின் சித்தி வாசுகி என்பவர் தடுக்க முயன்றார். அப்போது அவரது கழுத்தில் கத்தியால் குத்த முயன்றனர். அவர் தப்பி செல்ல முயன்றதால் காலில் கத்திக்குத்து விழுந்தது. இதற்கிடையே கத்திக்குத்து பட்ட பிரகாஷ் வீட்டிற்குள் சென்று விட்டார். இதனால் 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதைத்தொடர்ந்து கத்திக்குத்து காயம் அடைந்த பிரகாஷ் மற்றும் வாசுகியை 108 ஆம்புலன்சு மூலம் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் வாசுகி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பிரகாசை கொலை செய்த 6 பேரும் பிடிபட்டனர்.

    போலீசாரின் விசாரணையில் 6 பேரும் சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசாரிடம் 6 பேர் கும்பல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் உள்பட நாங்கள் 7 பேரும் ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் எங்கள் 6 பேரையும் தாக்கி விட்டார். இதனால் அவரை பழி வாங்க வேண்டும். அவருக்கு மரண பயத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தோம்.

    ஆனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கருதவில்லை. அவரை நேற்று பார்த்ததும் ஆத்திரம் அடைந்த 6 பேரும் சரமாரியாக கத்தியால் குத்தினோம். இதில் அவர் இறந்து விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×