search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த 2 மாதத்தில் திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்ட 13 கிளினீக்குகளுக்கு சீல்
    X

    கடந்த 2 மாதத்தில் திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்ட 13 கிளினீக்குகளுக்கு 'சீல்'

    • திருப்பூரில் முறைகேடாக செயல்பட்டு வருகிற மருந்தகங்கள், கிளினீக்குள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்று சந்தேகப்படும்படி ஏதேனும் மருந்தகங்கள், கிளினீக்குகள், மருத்துவமனைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் முறைகேடாக செயல்பட்ட 13 கிளனீக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போலி மருத்துவர்கள் பீதியில் உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் செயல்பட்டு வருகிற மருத்துவமனைகள் மற்றும் கிளினீக்குகள், மருந்தகங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது இவை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காட்டில் செயல்பட்டு வருகிற இஷ்வந்த் என்ற கிளினீக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் வினீத்திற்கு புகார் வந்தது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர்கள் ஹரி கோபாலகிருஷ்ணன், ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று இஷ்வந்த் கிளினீக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது கடந்த 2019-ம் ஆண்டு ஒருவரின் பெயரில் உரிமம் பெறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த உரிமத்தை அண்ணாத்துரை என்பவர் பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய போது மேலும், ஒரு திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அண்ணாத்துரை என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்ட கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதுபோல் அண்ணாத்துரை என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்துள்ளதாக தெரிவித்த நிலையில், அவரது படிப்பு சான்றிதழ்களுடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் முறைகேடாக செயல்பட்டு வந்த 13 கிளினீக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலி மருத்துவர்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது:-

    திருப்பூரில் முறைகேடாக செயல்பட்டு வருகிற மருந்தகங்கள், கிளினீக்குள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்று சந்தேகப்படும்படி ஏதேனும் மருந்தகங்கள், கிளினீக்குகள், மருத்துவமனைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 மாதத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளோம். இதில் முறைகேடாக செயல்பட்ட 13 கிளினீக்குள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×