search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலி
    X

    கொடைக்கானல் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

    • விப‌த்தை ஏற்ப‌டுத்தி விட்டு நிற்காம‌ல் சென்ற‌ காரை போலீசார் 12 கி.மீ ம‌லைச்சாலையில் விர‌ட்டி சென்று பெருமாள்ம‌லை சோத‌னை சாவ‌டியில் ம‌ட‌க்கி பிடித்தனர்.
    • விப‌த்தால் அண்ணாசாலை முழுவ‌தும் சிறிது நேர‌ம் ப‌ர‌ப‌ர‌ப்பு நில‌வியது.

    கொடைக்கானல்:

    தமிழ்ப்புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை தொடர்ந்து கொடைக்கானலில் நிலவும் இதமான கால நிலையை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

    இந்நிலையில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (வயது 29) தனது நண்பர்கள் 6 பேருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து விட்டு விருதுநகருக்கு செல்லும் போது அவர் ஓட்டி வந்த கார் அண்ணாசாலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த தீபேஷ் (23), சுந்தர் (25) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்திய கார் மீண்டும் வேகமாக சென்று அருகில் இருந்த கடைகளின் மீதும், நின்று கொண்டு இருந்த ஆம்னி வேனின் மீதும் மோதியது. கார் நிற்காமல் செல்லவே, அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் துரிதமாக மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

    இதனிடையே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் 12 கி.மீ மலைச்சாலையில் விரட்டி சென்று பெருமாள்மலை சோதனை சாவடியில் மடக்கி பிடித்தனர். வாகனத்தினை ஓட்டிய ராணுவவீரர் மற்றும் அவரது நண்பர்களை கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். முன்பகை காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தினரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் படுகாயமடைந்த தீபேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அண்ணாசாலை முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×