search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடி ரெயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய்
    X

    காட்பாடி ரெயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய்

    • குழந்தையை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர்:

    சேலம் ஆட்டையாம் பட்டியை சேர்ந்தவர்கள் சுந்தரி (வயது 63), சிவகுமார் (43). இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக காட்பாடிக்கு வந்தனர்.

    சேலத்துக்கு செல்வதற்காக நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ரெயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.

    அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 மாத பெண் கைகுழந்தையுடன் 1-வது பிளாட்பாரத்திற்கு வந்தார்.

    சுந்தரி மற்றும் சிவகுமாரிடம் அருகே சென்று நான் இயற்கை உபாதை கழிப்பதற்காக செல்கிறேன் எனது குழந்தையை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு கூறினார்.

    குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. அந்த இளம்பெண்ணை பிளாட்பாரம் முழுவதும் தேடினர்.

    அவர் கிடைக்காததால் சுந்தரியும், சிவகுமாரும் காட்பாடி ரெயில்வே போலீஸ்சாரிடம் சென்று நடந்தவை பற்றி கூறியுள்ளனர்.

    உடனடியாக ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் அந்த இளம் பெண் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதும், சுந்தரியிடம் குழந்தையை ஒப்படைப்பதும் மீண்டும் ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில் சென்று ஆட்டோ டிரைவர்களிடம் பேசுவது போன்றவை பதிவாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த இளம் பெண் கண்ணமங்கலம் செல்ல எவ்வளவு கட்டணம்? வேலூருக்கு செல்ல எவ்வளவு என்று விசாரித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் ஏறி சென்றதாக தெரிவித்தனர்.

    இதனால் குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற பெண் அவர் குழந்தையின் தாயாக இருக்கலாம் கண்ணமங்கலம் அல்லது சுற்று வட்டாரங்களை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

    குழந்தையை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இச்சம்பவத்தால் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×