

பெரியகுளம்:
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் துரை (வயது 50). இவர் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் தனியார் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார்.
இங்கு தாமரைக்குளத்தை சேர்ந்த சங்கீதா வேலைபார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைக்கடையில் நகை இருப்பு மற்றும் பணம் ஆகியவற்றை சரிபார்த்த போது 102 போலியான முகவரிகள் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்திருந்தது தெரியவந்தது.
அதாவது ஒருவர் 5 பவுன் நகை அடகு வைக்க வருகிறார் என்றால், அவருக்கு 7 பவுன் நகை அடகு வைத்ததாக கணக்கு காட்டி கூடுதல் நகைக்கான தொகையை சங்கீதா எடுத்துக் கொண்டுள்ளார். இதேபோல 102 பேர்களில் கவரிங் நகைகளை அடகுவைத்து ரூ22.17 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இந்த மோசடிக்கு சங்கீதாவின் கணவர் பிரசாந்த், அவரது தம்பி கவுதம் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சங்கீதாவிடம் துரை கேட்டபோது தான் மோசடி செய்தது உண்மைதான் எனக்கூறி அந்த பணத்தை கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து சங்கீதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரை கேட்டபோது, தங்களிடம் பணம் இல்லையென்றும் பணம் கேட்டு மிரட்டினால் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மிரட்டினார்.
இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.