search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசவபட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- 5 பேர் படுகாயம்
    X

    கொசவபட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- 5 பேர் படுகாயம்

    • சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.
    • காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் அழைத்து வரப்பட்டன. அவற்றுக்கு பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

    இதேபோல் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் உறுதிமொழியுடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    இதில் மாடுபிடி வீரர்களான மயிலாப்பூரை சேர்ந்த ராபின் (வயது 21), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (24), நத்தத்தைச் சேர்ந்த இந்தியன் (21), பார்வையாளர் அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த கெடி (18), மாட்டின் உரிமையாளரான கோம்பைபட்டியை செல்வராஜ் (18) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதில் செல்வராஜ், இந்தியன் ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெவ்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதன் முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

    Next Story
    ×