search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க-வைர நகைகள் கொள்ளை
    X

    பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க-வைர நகைகள் கொள்ளை

    • வீட்டில் ஆளில்லாததை நோட்டம் மிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.
    • வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மஞ்சுளா தேவி(55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மஞ்சுளா தேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.மஞ்சுளா தேவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 8-ந் தேதி மஞ்சுளாதேவி வீட்டை பூட்டிவிட்டு கொல்கத்தாவிற்கு சாமி தரிசனம் செய்ய சென்று விட்டார். பின்னர் மீண்டும் 15-ந் தேதி ஈரோடுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மூன்று ஜோடி வைர கம்மல், ஒரு ஜோடி வைர வளையல், 4 வைர மோதிரங்கள், 7 ஜோடி தங்க கம்மல், 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை மற்றும் தங்க காசு, நெக்லஸ் என மொத்தம் 42 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் வைர நகைகள் மற்றும் ரூ.4லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டம் மிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் கொள்ளை நடந்த அன்று நள்ளிரவு மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைவது பதிவாகி இருந்தது.

    அதில் இரண்டு நபர்களின் உருவமும் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெங்களூரை சேர்ந்த பிரபல கொள்ளையர்களான குணா (22), நவீன்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்புதகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு-

    ஈரோடு பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான குணா, நவீன்குமார் பிரபல கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் மீது பெங்களூரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக குணா மீது 20 திருட்டு வழக்குகளும், நவீன் குமார் மீது 10 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இவர்கள் இரண்டு பேரும் பூட்டிய வீட்டுக்குள் லாபகமாக நுழைந்து திருடுவதில் கில்லாடிகள்.

    பெங்களூரில் இவர்கள் 2 பேரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். குணா, நவீன் குமார் 2பேரும் திருட்டு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் போது ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியுள்ளனர். பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் சேர்ந்து திருடி வந்துள்ளனர். இவர்களது முக்கிய வேலையே மோட்டார் சைக்கிளில் ஊரை சுற்றி ஒவ்வொரு பகுதியாக சென்று நோட்டமிடுவது தான். குறிப்பாக பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சென்று நோட்டமிட்டு அங்கு எந்தெந்த வீடுகள் மூடப்பட்டுள்ளதோ அந்த வீடுகளில் இரவில் சென்று கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

    பெங்களூரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதால் இருவரும் அங்கிருந்தால் மாட்டி விடுவோம் என்று கருதி தமிழ்நாட்டுக்கு தப்பி வந்துள்ளனர். கிருஷ்ணகிரியில் நவீன் குமார் பெற்றோர் வசித்து வருகின்றனர். அங்கு இருவரும் சிறிது காலம் தங்கி இருந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் ஈரோடு வந்து பெண் தொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டி உள்ளனர். தமிழகத்தில் இவர்கள் இருவர் மீதும் வேறு எங்கும் திருட்டு வழக்குகள் இல்லை என்றுதெரியவந்தது.

    கைதான 2 பேரிடம் இருந்தும் 42 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் வைர நகைகள், ரூ.4.20 ரொக்க பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு வாகனம், இரண்டு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கைதான குணா, நவீன் குமார் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பெங்களூரை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் இருவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×