அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்- திருப்பூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர்:

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபாத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அரசின் அக்னிபாத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

திருப்பூர் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

திருப்பூரில் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால் கலவரத்தில் யாரும் ஈடுபட முயற்சி செய்துவிட கூடாது என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகளை முழுமையாக சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒவ்வொருவராக உள்ளே செல்லும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம் உள்புறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com