

மதுரை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து யூ-டியூபில் கடுமையான விமர்சனம் செய்தும், அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த அவரிடம், இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் கோர்ட்டில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதன்பேரில் அவர் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்தபோது யூ-டியூப்பில் தேவையற்ற பதிவுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பது தொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்கவும், யூ-டியூப் சம்பந்தமான விபரங்களை சேகரித்து நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர் ராமகிருஷ்ணனை நியமித்தும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூ-டியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது. யூ-டியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமனம் செய்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் யூ-டியூப் குறித்து விபரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.