நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி

கிறிஸ்டியன் டேனியல் சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.புதுமாப்பிள்ளை பலியானது குறித்து தகவல் அறிந்ததும் பெண் வீட்டார் மற்றும் கிறிஸ்டியன் டேனியலின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி
Published on

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் கிறிஸ்டியன் டேனியல் (வயது 25), என்ஜினீயர்.

இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கிறிஸ்டியன் டேனியல் சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை அருகே தேனூர் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது கிறிஸ்டியன் டேனியல் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிறிஸ்டியன் டேனியல் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு கிறிஸ்டியன் டேனியல் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்டியன் டேனியல் பலியானது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இங்கிருந்து மதுரைக்கு சென்றனர்.

புதுமாப்பிள்ளை பலியானது குறித்து தகவல் அறிந்ததும் பெண் வீட்டார் மற்றும் கிறிஸ்டியன் டேனியலின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பலியான கிறிஸ்டியன் டேனியலின் உடல் பிரேத பரிசோதனை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com