பராமரிக்க முடியாததால் பாட்டியை எரித்துக்கொன்றேன்- கைதான பேத்தி வாக்குமூலம்

பாட்டியை சரிவர எங்களால் பராமரிக்க முடியதாக காரணத்தால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக கைதான பேத்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாரியம்மாள்
மாரியம்மாள்
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ந்தேதி பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், கொலை செய்யப்பட்ட பெண் பழையபேட்டை கண்டியபேரியை சேர்ந்த சுப்பம்மாள்(வயது 90) என்பதும், அவரது பேத்தியே பெட்ரோல் ஊற்றி அவரை எரித்துக்கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுப்பம்மாளின் மகள்வழி பேத்திகளான, கண்டியபேரியை சேர்ந்த மாரியம்மாள்(40), பேட்டை செக்கடியை சேர்ந்த மேரி(38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாரியம்மாள் கூறியதாவது:

வயது முதிர்வின் காரணமாக எங்களது பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. இதனால் அவரை சரிவர எங்களால் பராமரிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதனை எனது தங்கையிடம் தெரிவித்தேன். ஆனால் அவள் வேண்டாம் என்று கூறினாள். நான் அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தேன். ஆனாலும் அதன்பின்னர் அவள் வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

சம்பவத்தன்று நான் பாட்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றேன். அங்கு பெட்ரோல் ஊற்றி எரித்தேன் என்றார்.

இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

கொலை பற்றி அறிந்தும் அதனை போலீசாரிடம் தெரிவிக்காததால் மேரியும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் மாரியம்மாள், மேரி ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com