அரியலூரில் அரசு பள்ளி ஆசிரியர் திடீர் தற்கொலை- காரணம் குறித்து போலீசார் விசாரணை

அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கார்த்திகேயன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.14-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரில் அரசு பள்ளி ஆசிரியர் திடீர் தற்கொலை- காரணம் குறித்து போலீசார் விசாரணை
Published on

அரியலூர்:

அரியலூர் நகர் பகுதியான பெரிய அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் அப்பகுதி நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் (38). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கார்த்திகேயன் அரியலூரை அடுத்த சிறுவளூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். முதலில் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க அதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனித்து வந்தார்.

ஆனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய் உள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவைகளையும் பள்ளிக்கு சென்று பார்த்துக்கொண்டார்.

இதற்கிடையே நேற்று காலை முதல் கார்த்திகேயன் மிகுந்த விரக்தியில் இருந்தார். அவரது மனைவி காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று கூறி மறுத்துவிட்டார். அப்போது வீட்டின் தனி அறைக்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தவாறு திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகிலேயே பூச்சி மருந்து பாட்டில் கிடந்துள்ளது. இதையடுத்து அவரை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் இன்று காலை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கார்த்திகேயன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

14-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com