search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசி பயணம் என கேலி பேசி பெண்களை ஏற்ற மறுத்த அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் சஸ்பெண்டு
    X

    ஓசி பயணம் என கேலி பேசி பெண்களை ஏற்ற மறுத்த அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் சஸ்பெண்டு

    • ஆலமரத்துப்பட்டி சென்று திரும்பிய அந்த பஸ்சை கோடாங்கிபட்டியில் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
    • அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்த நான்கு பெண்கள், 3 வயது பெண் குழந்தை ஒருவருடன் அரசு பஸ்சில் ஏறி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சிமங்கலம் கிராமத்தில் செயல்படும் ரேசன் கடைக்கு சென்றனர். பின்னர் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து ஆலமரத்துப்பட்டி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. உடனே 3 பெண்கள் ரேசன் பொருட்களுடன் பஸ்சில் ஏறினர். அப்போது மூன்று வயது சிறுமியின் தாயார் தனது மகளை பஸ்சில் ஏற்றி விட்டு இன்னொரு அரிசி மூட்டையை எடுக்க சென்றார். அதற்குள் கண்டக்டர் விசில் அடித்துள்ளார். உடனே டிரைவரும் பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதற்கிடையே 3 வயது சிறுமி தாயை காணாமல் அழத்தொடங்கினாள். பின்னர் பஸ்சில் ஏறிய பெண்கள் மற்றும் அந்த குழந்தையை கோடாங்கிபட்டியில் இறக்கிவிட்டனர். பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தகவல் கொடுத்தார். இதையடுத்து ஆலமரத்துப்பட்டி சென்று திரும்பிய அந்த பஸ்சை கோடாங்கிபட்டியில் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்தில் பயணம் செய்யும் பெண்களை இந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஓசி பயணம் என்றும், தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பான வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து பெண்களை ஏற்றிச் செல்ல மறுத்த டிரைவர் பன்னீர்செல்வம் மற்றும் கண்டக்டர் மகேந்திரன் ஆகியோரை கரூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்டு காலத்திற்கு பின்னர் டிரைவரை காரைக்குடிக்கும், கண்டக்டரை தேவகோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×