search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டாமுத்தூரில் அரசு பஸ் மோதி கணவன்-மனைவி பலி
    X

    விபத்தில் பலியான ராஜேந்திரன்-தேவி (திருமணத்தின் போது எடுத்தப்படம்).

    தொண்டாமுத்தூரில் அரசு பஸ் மோதி கணவன்-மனைவி பலி

    • விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.

    வடவள்ளி:

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இந்த தம்பதியினருக்கு தர்னிஷ், வாசுலேகா என 2 குழந்தைகள் உள்ளனர்.

    ராஜேந்திரனும், அவரது மனைவி தேவியும், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தனர். தினமும் கணவன், மனைவி 2 பேரும் அதிகாலையிலேயே சைக்கிளில் புறப்பட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலையும் வழக்கம்போல கணவன், மனைவி 2 பேரும் வேலைக்கு புறப்பட்டனர். காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து பூலுவப்பட்டிக்கு சைக்கிளில் சென்றனர்.

    அப்போது சிறுவாணி சாலையில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஆலாந்துறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    திடீரென அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பஸ்சில் 2 பேர் சிக்கியது தெரியாமல் பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரின் உடலும் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.

    இந்த விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

    இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். மேலும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.

    அவரை தொண்டாமுத்தூர் போலீசார், ஆலாந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாலை நேரத்தில் வேலைக்கு சென்ற கணவன்- மனைவி அரசு பஸ் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியரின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது உருக்குவதாக இருந்தது.

    இதற்கிடையே சிறுவாணி சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது.

    இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே இங்கு சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×