துடியலூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் காட்டு யானை

துடியலூர் அருகே யானை மின்வேலியில் சிக்கி இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ஆண் யானையை காணலாம்.
பலியான ஆண் யானையை காணலாம்.
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 50க்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக துடியலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

துடியலூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் அருகே உள்ளது வரப்பாளையம் கிராமம். இன்று காலை இந்த கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது.

இதுபற்றி தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்து இறந்த கிடந்த யானையை பார்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் விரைந்து வந்து இறந்து கிடந்த யானையை பார்த்தனர்.

அப்போது உயிரிழந்து கிடந்தது ஆண் யானை என்பது தெரியவந்தது. யானையின் துதிக்கையில் கம்பி ஒன்று கிடந்தது.

இதனால் யானை மின்கம்பியில் சிக்கி இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் உடற்கூராய்வு செய்த பின்னரே உறுதியான தகவல் தெரிவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

யானை மின்வேலியில் சிக்கி இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது, யானைகள் தொடர்ந்து இறப்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 5-க்கும் அதிகமான யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்துள்ளன. எனவே வனத்துறையினர் யானைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com