இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர்- 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது

இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான வாலிபரை 7 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியை சேர்ந்தவர் சகாய ஆரோக்கியம் (வயது40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி லதா தனது மகன் டேனியலுடன் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தார். மறுநாள் லதாவும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

போலீஸ் விசாரணையில் கோவளம் பகுதியை சேர்ந்த வினோத் (34) என்ற ஆட்டோ டிரைவர் நகைக்காக லதாவையும், அவரது மகனையும் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வினோத் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து ராதாபுரம் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால் போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் வினோத் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமேய்சிங் மீனா மேற்பார்வையில் கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த வினோத்தை கைது செய்தனர்.

பின்னர் அவரை நெல்லைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com