ஆட்டோ மீது கார் மோதல்- பிறந்த குழந்தையுடன் தாய்-தந்தை, டிரைவர் பலி

பச்சிளங்குழந்தையுடன் தம்பதி உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ மீது கார் மோதல்- பிறந்த குழந்தையுடன் தாய்-தந்தை, டிரைவர் பலி
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை அடைக்கனூரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சின்ன அடைக்கான் (வயது 28). இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே சிங்கி வலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சேதுராஜா மகள் சுமதிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பிணியான சுமதியை சின்ன அடைக்கான் குடும்பத்தினர் கடந்த மாதம் ராமநாதபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுமதிக்கு கடந்த 17-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சின்ன அடைக்கானின் உறவினர் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதற்காக தனது மனைவியை ஊருக்கு அழைத்து வர முடிவு செய்தனர். இதற்காக நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து சுமதி டிஸ்ஜார்ஜ் ஆனார். அதனைத் தொடர்ந்து தனது பச்சிளங்குழந்தையுடன் சுமதி, கணவர் சின்ன அடைக்கான், தாய் காளியம்மாள் (50) ஆகியோர் சிங்கிவலைக்குப்பத்துக்கு ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோவை மலைராஜ் என்பவர் ஓட்டி வந்தார். ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே எதிரே வந்த கார் இடது புறமாக சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கி அதில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே மலைராஜ், சுமதி, ஆகியோர் உயிரிழந்தனர். சிகிச்சையில் இருந்த பச்சிளங்குழந்தையும், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சின்ன அடைக்கானும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கார் டிரைவரான சென்னை சேலையூர் கேம்ப் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (34) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காளியம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பச்சிளங்குழந்தையுடன் தம்பதி உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com