search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து கைதிகள்-போலீசார் மீது தாக்குதல் நடத்திய கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது
    X

    அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து கைதிகள்-போலீசார் மீது தாக்குதல் நடத்திய கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது

    • கடந்த பிப்ரவரி மாதம் குணாவை, சின்னத் தம்பி தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.
    • தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கூலிப்படையை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மதுரை:

    திண்டுக்கல் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்தவர்கள் குணா, சின்னதம்பி.இவர்களின் கூட்டாளிகள் யுவராஜ்குமார், விக்னேஷ் குமார். இவர்கள் 4 பேரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது திண்டுக்கல் தாலுகா போலீசில் பல வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் குணா, சின்னதம்பி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் குணாவை, சின்னத் தம்பி தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1-ந்தேதி மதுபான பாருக்கு சென்றபோது சின்னத்தம்பிக்கும், யுவராஜ் குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சின்ன தம்பி, அவரது தம்பி பரமசிவன் என்ற குட்டி ஆகியோர் யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் ஆகியோரை தாக்கினர்.

    இந்த சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் மார்ச் 2-ஆம் தேதி யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் தரப்பினர் சின்ன தம்பியை வெட்டி கொலை செய்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து யுவராஜ்குமார், விக்னேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2பேரும் மார்ச் 6-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    யுவராஜ்குமாரும், விக்னேஷ்குமாரும் காயமடைந்து இருந்ததால் அவர்கள் சிகிச்சைக்காக மார்ச் 22-ந்தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் உள்நோயாளிகளாக பொது வார்டியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கைதிகள் 2 பேருக்கும் திண்டுக்கல் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பால் செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி இரவு 7 மணி அளவில் 2 சொகுசு கார்களில் 8 பேர் கும்பல் வந்தது. அவர்களில் 4 பேர் யுவராஜ் குமார், விக்னேஷ்குமார் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். 4 பேர் கும்பல் வார்டுக்குள் சென்றதும் யுவராஜ்குமார் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளது. அதனை தடுக்க முயன்ற ஆயுதப்படை போலீஸ் காரர்கள் சிலம்பரசன், அழகுராஜ் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கியுள்ளனர். இருந்த போதிலும் போலீசார் விக்னேஷ்குமாரை மீட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    போலீஸ்காரர் சிலம்பரசன் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால் பயந்து போன 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த போத்தி ராஜ், நட்டு ராயன், அருண், சின்ன தம்பியின் தம்பி விஜி, ஒளிகை ராமச்சந்திரன், சோனையன் உள்ளிட்ட 7பேர் என்பதும், மற்றொருவர் கார் டிரைவர் என்றும் கூறப்படுகிறது.

    தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியம்மாள், குமார் உள்ளிட்ட 6பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு சம்பந்தமில்லை என்று தெரிய வந்ததால் அவர்களை விடுவித்து விட்டனர்.

    தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கூலிப்படையை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவணன் (29) தங்கமலை (27)ஆகிய 2 பேர் கூலிப்படைகளாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார் டிரைவர் உள்பட 6பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×