search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் மின்கம்பம் மீது கார் மோதி கவிழ்ந்தது- 5 பேர் படுகாயம்
    X

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் மின்கம்பம் மீது கார் மோதி கவிழ்ந்தது- 5 பேர் படுகாயம்

    • மின்கம்பத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி பலத்த சத்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே சாலை ஓரத்தில் இருந்த உயரழுத்த மின்கம்பத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி பலத்த சத்தத்துடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த பயங்கர விபத்தில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. ஆனால் அதிகாலை நேரம் என்பதால் மக்கள் இல்லாததால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இதனைதொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு கார் கண்ணாடிகளை உடைத்து உடனடியாக காரில் இருந்த 5-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது மின் கம்பம் மின் கம்பியில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அரசு பஸ் ஒன்று செல்வதற்கு முயன்ற போது திடீரென்று மின் கம்பி மீண்டும் அறுந்து பஸ் மீது மின்கம்பம் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அப்போது அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

    அப்போது மின்சாரத்துறை செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் மேற்பார்வையில் உதவி மின் பொறியாளர் அருள் மற்றும் மின் துறை ஊழியர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக பஸ் மீது விழுந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினார்கள். இதில் அரசு பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறு ங்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து அரசு பஸ் டிரைவரை கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மஞ்சக்குப்பம் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வந்தனர்.

    மேலும் மின்சார துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரமாக பணிகளை மேற்கொண்டு ஒரு சில பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் ஒரு சில பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் காரில் வந்தவர்கள் திருத்தணியை சேர்ந்தவர்கள் என்பதும், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு செல்வதற்காக சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. காரை டிரைவர் கோபி ஓட்டி வந்ததும் அதில் வந்ததிருத்தணியை சேர்ந்த அம்சா உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அம்சாவைமேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை ஓர மின் கம்பத்தில் கார் மோதி விபத்து நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×