மேலூர் அருகே கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை: வாலிபர்கள் வெறிச்செயல்

வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார்.
மேலூர் அருகே கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை: வாலிபர்கள் வெறிச்செயல்
Published on

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி பக்கமுள்ள ஆண்டிகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பசாமி (வயது41). இவரது மனைவி செல்வி (41). இவர்களுக்கு அஜித்குமார் (20) என்ற மகன் உள்ளார்.

கணவன்-மனைவி இருவரும் தங்கள் கிராமத்தில் உள்ள இளமி கண்மாயில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மழுவேந்தி (35), அவரது உறவினர் ராஜதுரை (20) ஆகியோரும் மீன்பிடித்தனர்.

இந்நிலையில் மீன்பிடிப்பது தொடர்பாக அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாத்தில் ஈடுபட்ட அவர்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களை அந்த பகுதியில் நின்றவர்கள் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இரவில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வீட்டு வாசலில் படுத்து தூங்கினர். அவர்களது மகன் அஜித்குமார் வீட்டுக்குள் படுத்திருந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அலறும் சத்தம் கேட்டு, வீட்டினுள் படுத்து தூங்கிய அஜித்குமார் எழுந்து வந்து பார்த்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அஜித்குமாரை பார்த்ததும் அங்கு அரிவாளுடன் நின்று கொண்டிருந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரை ஆகிய இருவரும் தப்பி ஓடினர். அவர்கள் இருவரும் சேர்ந்து நள்ளிரவில் கருப்பசாமியின் வீடு புகுந்து அவரையும், அவரது மனைவி செல்வியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, கீழவளவு இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்தனர்.

அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பதி கொலை குறித்து விசாரணை நடத்தினர். இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் மற்றும் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

மீன்பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கணவன்-மனைவியை வெட்டிக்கொன்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளிகள் இருவரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com