குளச்சல் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

தண்ணீர் தொட்டிலில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
Published on

நாகர்கோவில்:

கருங்கல் அருகே முள்ளூர் துறையை சேர்ந்தவர் சுஜின். இவருக்கும் குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்த மேரி வர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதையடுத்து சுஜின் மனைவி வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஷகிப்சேன்டினோ (வயது 3) என்ற மகனும், 1½ வயதில் மகளும் இருந்தனர். சுஜின் மீன்பிடித் தொழில் செய்து வந்ததையடுத்து அவர் கடலுக்கு சென்று இருந்தார். வீட்டில் குழந்தைகள், மேரி வர்ஷா மற்றும் அவரது தாயார் இருந்தனர்.

நேற்று மாலையில் மேரி வர்ஷா வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது மகன் ஷகிப்சேன்டினோ வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த மேரி வர்ஷா வீட்டிற்கு திரும்பியபோது மகனை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தை ஷகிப்சேன்டினோவை அந்த பகுதி முழுவதும் தேடினர். எங்கு தேடியும் குழந்தையை காணவில்லை. இவர்களது வீட்டு பக்கத்தில் உள்ள வீடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த வீட்டின் கேட் திறந்த நிலையில் இருந்தது. எனவே ஷகிப்சேன்டினோ அங்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் காணப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது ஷகிப்சேன்டினோ தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதைகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷகிப்சேன்டினோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டிலில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com