என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு
- முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது.
- ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்துக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 12-ந்தேதி ரூ.109 ஆக இருந்த கறிக்கோழி விலை, நேற்று ரூ.116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது.
கறிக்கோழி தேவை அதிகரித்து உள்ள நிலையில் கடும் வெயிலால் அதன் எடை குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மீன்பிடி தடையால் விற்பனை தடை இன்றி நடைபெறுவதும், மைனஸ் விலை இல்லாததாலும் தற்போதைய விலையே தொடரலாம் என பண்ணையாளர்கள் என்.இ.சி.சி கமிட்டி உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது. ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






