பெட்ரோல்-டீசல், தீவனம் விலை உயர்வால் கறிக்கோழி விலையும் கிடுகிடு உயர்வு- கிலோ ரூ.280-க்கு விற்பனை

கறிக்கோழிகள் தற்போது கடைகளில் ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள், இல்லத்தரசிகள் கவலையடைந்து உள்ளனர்.
கறிக்கோழி
கறிக்கோழி
Published on

கோவை:

தமிழகத்தில் பல்லடம், சுல்தான் பேட்டை, உடுமலை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளது.

இந்த பண்ணைகளில் தினசரி சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த கறிக்கோழிக்கு பண்ணை கொள்முதல் விலையானது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நுகர்வு ஏற்றம், இறக்கத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.95 வரை செலவாகிறது.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி கொள்முதல் விலை கிலோ உயிருடன் ரூ.121 இருந்தது. இந்த கொள்முதல் விலை சிறிது, சிறிதாக உயர்ந்து கணிசமான லாபத்தை ஈட்டி தருவதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கறிக்கோழிகள் தற்போது கடைகளில் ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள், இல்லத்தரசிகள் கவலையடைந்து உள்ளனர். இதன் காரணமாக கறிக்கடைகளில் கறிக்கோழிகள் விற்பனை குறைந்துள்ளது.

இது குறித்து கோழிக்கறி கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

தற்போது கறிக்கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் விலை உயர்ந்து உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் கறிக்கோழிகள் விலை உயர்ந்து உள்ளது. மேலும் கடுமையான வெயில் காரணமாக கோழி வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக விற்பனை குறைவாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com