புவனகிரியில் பலத்த மழை- டாஸ்மாக்கில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

புவனகிரி பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது.
புவனகிரியில் பலத்த மழை- டாஸ்மாக்கில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
Published on

புவனகிரி:

புவனகிரி அடுத்த கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 45). கொத்தனார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நேற்று இரவு புவனகிரி அருகே குரியாமங்கலம் சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்றார். அங்கு மதுபானத்தை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்.

புவனகிரி பகுதியில் நேற்றிரவு திடீர் மழை பெய்தது. இதனால் டாஸ்மாக் கடையிலேயே நின்றார். டாஸ்மாக் கடையில் இருந்த இரும்பு கம்பத்தை பிடித்து நின்றார். அதிலிருந்து வந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைக் கண்ட மற்ற குடிமகன்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

அங்கு வந்த ஒரு சிலர், இந்த கம்பத்திலிருந்து மின்சாரம் வருகிறது என்று நாங்கள் ஒரு மணிநேரத்திற்கு முன்பே கூறினோம். நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜாராமன் மின்சாரம் தாக்கி இறந்திருக்கமாட்டார் என்று டாஸ்மாக் ஊழியர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார், ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அங்கு வந்தார். மின் கசிவினை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லையேல் கடையை திறக்க கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com