search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானியில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கத்தியுடன் நுழைந்து ஊழியர்களிடம் நகை, பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
    X

    பவானியில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கத்தியுடன் நுழைந்து ஊழியர்களிடம் நகை, பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

    • கொள்ளை கும்பல் பயன்படுத்திய ஒரு மொபட், கிரிக்கெட் பேட் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைதான வாலிபர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காணலாம்.

    பவானி:

    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் என்பவர் நடத்தி வரும் இந்த சிகிச்சை மையத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த சிகிச்சை மையத்தில் நேற்று இரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த சிகிச்சை மையத்தின் உள்ளே புகுந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கிரிக்கெட் மட்டை மற்றும் பெரிய கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பணியாற்றி கொண்டு இருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கழுத்தில் கத்தியை வைத்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்தனர்.

    இதை தொடர்ந்து உரிமையாளர் கீர்த்தன் இந்த நிறுவனத்தின் உள்ளே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நிறுவனத்தில் புகுந்து பணம் மற்றும் நகை பறித்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உரிமையாளர் கீர்த்தன் உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் கிடைத்த தும்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூடப்பட்டு இருந்த ஷெட்டரை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை கிரிக்கெட் பேட்டாலும், கத்தியாலும் தாக்கி 4 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் மற்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை கும்பல் பயன்படுத்திய ஒரு மொபட், கிரிக்கெட் பேட் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் அவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கவுதம் என தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய 4 பேர் குறித்து லட்சுமி நகர் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க தேடுதல் பணியில் தீவிரபடுத்தி உள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அந்த நிறுவன பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதிக நடமாட்டம் உள்ள லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் கொள்ளை கும்பல் உள்ளே புகுந்து கிரிக்கெட் மட்டை மற்றும் பெரிய கத்தியுடன் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகை பறித்துச் சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்தும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை கும்பல் நடத்திய முதல் சம்பவமா? அல்லது வேறு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.கைதான வாலிபர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காணலாம்.

    Next Story
    ×