search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் நுழைய தடை
    X

    பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் நுழைய தடை

    • பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
    • பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் வழிபாடு நடத்துவது சம்பந்தமாக இரு பிரிவினர் இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அந்தக் கோவிலுக்கு வழிபாடு செய்ய வரவில்லை.

    இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரு பிரிவினர், பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதை அறிந்த மற்றொரு பிரிவினர், பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர்.

    அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமீபத்தில் அந்த இரு சமூகத்தினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த கோவிலில் ஏற்கனவே என்ன நடைமுறையோ அதுவே பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இதை ஒரு பிரிவினர் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும் நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் நேற்று, சேந்தமங்கலம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பினை கருதி, பேளுக்குறிச்சி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்குள் வருகிற 17-ந் தேதி வரை பொதுமக்கள் உள்பட யாரும் நுழையக்கூடாது என்றும், கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கோவில் பிரச்சினையால், பேளுக்குறிச்சி பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், கோவில் உட்பட முக்கிய இடங்களில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×