மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்
Published on

மதுரை:

அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட செயலாளர் வரதலட்சுமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் தெய்வராஜ், செயலாளர் லெனின், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமுதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களிடம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மழை பெய்தது.

அதனையும் பொருட்படுத்தாமல் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள், இன்று காலை வரை விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும், பள்ளி-கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது போன்று சிறிய குழந்தைகளுக்கும் கோடை வெயிலை சமாளிக்கவும், தொற்று நோய் பரவலை தடுக்கவும் மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com