search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலும் ஒரு ஆட்டுக்குட்டியை கடித்து இழுத்து சென்ற சிறுத்தைபுலி- பொதுமக்கள் பீதி
    X

    ஆட்டுக்குட்டியை சிறுத்தை புலி கடித்து இழுத்துச் சென்றதாக கூறப்படும் சூரியாம்பாளையம் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்த காட்சி.

    மேலும் ஒரு ஆட்டுக்குட்டியை கடித்து இழுத்து சென்ற சிறுத்தைபுலி- பொதுமக்கள் பீதி

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், சிறுத்தை புலி கடித்து கொன்ற நாயை பார்வையிட்டு, வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினார்.
    • உடனடியாக சிறுத்தை புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் கன்று குட்டி, நாய், பல மயில்களை மர்ம விலங்கு வேட்டையாடி வருகிறது. மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தும், இறந்து கிடந்த கன்று, நாயை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பியும் வனத்துறையினர் இப்பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர். இதில், இந்த பகுதியில் சுற்றித் திரிவது சிறுத்தை புலி என்பது தெரியவந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் சிறுத்தை புலியை பிடித்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை காக்க வேண்டும் என கூறி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பரமத்திவேலூர் சேகர் எம்.எல்.ஏ ஆகியோர் சிறுத்தை புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், சிறுத்தை புலி கடித்து கொன்ற நாயை பார்வையிட்டு, வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினார். உடனடியாக சிறுத்தை புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதனையடுத்து நாமக்கல் வனசரக அலுவலர் பெருமாள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், ட்ரோன் மூலமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, பரமத்திவேலூர் சேகர் எம்.எல்.ஏ, கன்று குட்டி மற்றும் நாயை, சிறுத்தை புலி கடித்துக்கொன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வனத்துறை அதிகாரியிடம் சிறுத்தை புலியின் நடமாட்டம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் மாணிக்கம் நத்தம் ஊராட்சி சூரியாம்பாளையம் பெரிய தோட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த, ஆட்டுக்குட்டியை நேற்று இரவு மீண்டும் சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிவேல், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை அலுவலர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் கொண்ட குழுவினர் பழனிவேல் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    சிறுத்தை புலியின் அட்டகாசம் தொடர்வதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×