search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவின் அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- மதுரையில் கருப்பு கொடி ஏற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
    X

    ஆவின் அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- மதுரையில் கருப்பு கொடி ஏற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

    • ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
    • கருப்பு கொடி ஏற்றியும், கருப்பி பேட்ஸ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆவினுக்கு 60 சதவீத பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மேலமடையில் ஆவின் பால் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள வியாபாரிகளிடம், பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.7 வீதம் உயர்த்த வேண்டும் என்று மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தமிழக அரசு ஏற்று கொள்ளவில்லை.

    இந்த நிலையில் உசிலம்பட்டி ஆவின் பால் சேகரிப்பு மையத்தில் சமரச பேச்சுவார்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் சாந்தி, துணை பதிவாளர் செல்வம், உதவி பொது மேலாளர் வேலுச்சாமி மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் பெரியகருப்பன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெண்மணி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமரச தீர்வு எட்டப்படவில்லை.

    எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மதுரை மாவட்டம் முழுவதிலும் இன்று (11-ந் தேதி) முதல் ஆவினுக்கு பால் விநியோகத்தை நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி இன்று காலை முதல் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    சங்க நிர்வாகிகள் கருப்பு கொடி ஏற்றியும், கருப்பி பேட்ஸ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆவினுக்கு 60 சதவீத பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மாவட்டம் முழுவதிலும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பால் தேவை 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து தற்போது ஒரு லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் பால் விநியோக நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே ஆவின் பால் மேலாளர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக சங்கங்களின் கோரிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே பால் வியாபாரிகள், ஆவினுக்கான பால் விநியோகத்தை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×