

நெல்லை:
நெல்லை டவுனில் தொண்டர்நயினார் கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளது.
இந்நிலையில் இந்த கோவில் மற்றும் மேலும் சில கோவிலுக்கு சொந்தமான 6 கடைகளை சேர்ந்தவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் அவர்கள் ரூ.30 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர்கள் வாடகை செலுத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த வாரம் கோர்ட்டு மூலம் ஒரு வாரத்திற்குள் வாடகை பாக்கி செலுத்த வேண்டும், அல்லது கடையை காலி செய்ய வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் அவர்கள் வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் கோவில் செயல்அலுவலர் மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் மோகனா, இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி ஆகியோர் தலைமையில் இன்று கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது சில கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரு சில கடைக்காரர்கள் தாங்கள் இன்றுக்குள் வாடகை செலுத்தி விடுவதாக தெரிவித்தனர். இதனால் அந்த கடைகளுக்கு இன்று மாலை வரை அவகாசம் வழங்கினர்.
இன்று சீல் வைக்கப்பட்ட கடைகளில் கீழ ரதவீதியில் உள்ள தி.மு.க. நிர்வாகியின் கடையும் அடங்கும்.
அங்குள்ள ஓட்டல் வியாபாரி கூறும் போது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வாடகையாக ரூ.3,500 செலுத்தி வந்தேன். இதனை ரூ.9 ஆயிரமாக உயர்த்தினார்கள்.
இதனை குறைத்து தருமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு கூறினர்.
அதன்படி மேல்முறையீடு செய்துள்ளோம். மேலும் வழக்கமான ரூ.3,500-ம் செலுத்தி வருகிறோம். ஆனால் மீதம் உள்ள ரூ.5,500-ஐ கடந்த 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து கட்ட வேண்டும் என கூறுவதாக அவர் தெரிவித்தார்.