கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. விடுமுறை மற்றும் தரைப்பகுதியில் நிலவும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கொடைக்கானலில் சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பணிகள் வருகின்றனர்.

பிரதான சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை மட்டுமின்றி நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் திடீரென வெயிலும், அதனைத் தொடர்ந்து சாரல் மழையும், குளிரும் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மாறிவரும் காலநிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தொடர் மழையால் பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் வருகின்றனர். மேலும் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். இந்நிலையில் திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பைன் பாரஸ்ட் பகுதியில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளது. ஆனால் அதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுதடைந்து வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com