

கோவை:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் பரத் (50). இவர்கள் 2 பேரும் தங்க நகை வியாபாரிகள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் நகை விற்பதற்காக கோவை வந்தனர். ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் நகையை விற்று விட்டு அதற்கான பணம் ரூ.4 லட்சத்தை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே சென்றபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்கள் பணத்துடன் சென்ற பரத் மற்றும் ரோகித்தை கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கினர். பின்னர் ரூ.4 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த வழிப்பறி குறித்து நகை வியாபாரிகள் 2 பேரும் க.க.சாவடி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
விசாரணையில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த ரஞ்சித் (22), அபினேஷ் (27), ரஞ்சித்குமார் (32) ஆகியோருக்கு இந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது நகை வியாபாரிகளை தாக்கி பணம் பறித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்கள் 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.