உசிலம்பட்டி அருகே மின் வேலியில் சிக்கி 2 பேர் பலி: கரும்பு தோட்ட குத்தகைதாரர் கைது

விவசாய தோட்டங்களுக்குள் கரடி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.விவசாய கூலி தொழிலாளிகள் இருவர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
உசிலம்பட்டி அருகே மின் வேலியில் சிக்கி 2 பேர் பலி: கரும்பு தோட்ட குத்தகைதாரர் கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான தோட்டத்தை அதே ஊரை சேர்ந்த தர்மர் என்பவர் குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார்.

அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கரடி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க தர்மர் தனது தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக தெரிகிறது.

தர்மரின் தோட்டத்துக்கு அம்பாசமுத்திரம் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளிகளான மணி(வயது70), ஆசை பாண்டி(35) ஆகிய இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வர வில்லை.

இதனால் அவர்கள் இருவரையும் தேடி அவர்களது உறவினர்கள் தர்மரின் தோட்டத்துக்கு நேற்று சென்றனர். அப்போது அங்கு மணி, ஆசைபாண்டி ஆகிய இருவரும் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தனர். இருவரது உடலும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.

வேலைக்கு சென்றவர்கள் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்ததை பார்த்த இருவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விவசாய கூலி தொழிலாளிகள் இருவர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அதில் தர்மர் தனது கரும்பு தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தர்மரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com