search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள டயர்களை திருடிய 2 பேர் கைது
    X

    பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள டயர்களை திருடிய 2 பேர் கைது

    • டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது.
    • கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    பொன்னேரி:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து 1500 டயர்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு சென்றது. இந்த டயர்கள் அனைத்தும் பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    பிரேசில் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ரூ.8.29 லட்சம் மதிப்பு உள்ள 495 டயர்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக பிரேசில் நாட்டில் உள்ள நிறுவனம் சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது. மேலும் கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி நூதன முறையில் 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக மணலி சன்னதி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணி (29), திருவொற்றியூரைச் சேர்ந்த இளமாறன் என்கிற அப்புன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான 4 பேரை போலீசர் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×