search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 103.28 டிகிரி வெயில் பதிவு
    X

    கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 103.28 டிகிரி வெயில் பதிவு

    • வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவுவதால் பெரியவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் இதற்கு நேர் மாறாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெயில் 101 டிகிரியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக பதிவானது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக ஈரோடு மாவட்டத்தில் 103.28 டிகிரி பதிவாகி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணி முதல் வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவுவதால் பெரியவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். இதனால் மதிய நேரம் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதேபோல் காளிங்கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்காலிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இது தவிர இளநீர், கரும்பு பால், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இதன் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இப்போதே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் கத்திரி வெயிலை கண்டு ஈரோடு மக்கள் அச்சப்பட தொடங்கி விட்டனர்.

    Next Story
    ×