search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூடானில் சிக்கிய தமிழர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வு
    X

    சூடானில் சிக்கிய தமிழர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வு

    • சூடானில் இருந்து 500 இந்தியர்களுடன் கப்பல் புறப்பட்டு சவுதி அரேபியாவுக்கு இன்று வந்தது.
    • சூடானில் 300 தமிழர்கள் இருப்பதாக கடைசியாக வந்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போரால் 3 ஆயிரம் இந்தியர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். போரால் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு "ஆபரேஷன் காவேரி" என்ற பெயரில் மீட்பு நட வடிக்கை எடுத்து வருகிறது.

    போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல் மூலம் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளது.

    சூடானில் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பேர் சிக்கி இருப்பதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது. அவர்களை பத்திரமாக மீட்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    இதற்கிடையில் சூடானில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. முதல் பட்டியலில் 84 தமிழர்கள் என்றும் 2-வது பட்டியலில் 136 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

    300 தமிழர்கள் வரை அங்கு இருப்பதாக சூடான் நாட்டு இந்திய தூதரகம் மூலம் தெரிய வந்துள்ளது. 300 தமிழர்களையும் மீட்க மத்திய அரசுடன் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை ஆணையர் ஜெசிந்தா ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்.

    சூடானில் இருந்து 500 இந்தியர்களுடன் கப்பல் புறப்பட்டு சவுதி அரேபியாவுக்கு இன்று வந்தது. அங்குள்ள ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானம் மூலம் அவர்கள் டெல்லி வருகின்றனர். அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு அழைத்து செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    முதல் பயணத்தில் வந்த இந்தியர்களில் மிக குறைந்த அளவில்தான் தமிழர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 25 தமிழர்கள் முதல் விமானத்தில் வரலாம் எனவும் முழு விவரங்கள் தெரியவில்லை என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெசிந்தா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சூடானில் 300 தமிழர்கள் இருப்பதாக கடைசியாக வந்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து முதல் விமானம் மூலம் 300 இந்தியர்கள் இன்று டெல்லி வருகிறார்கள். அவர்களில் தமிழர்கள் சிலர் தான் உள்ளனர்.

    அவர்களை டெல்லியில் இருந்து இன்று சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. படிப்படியாக அங்குள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×