search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே சாலை வசதி இன்றி தவிக்கும் மாணவர்கள்
    X

    பள்ளிப்பட்டு அருகே சாலை வசதி இன்றி தவிக்கும் மாணவர்கள்

    • மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர்.
    • கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு ஒன்றியம் கொல்லாலகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் காட்டுக்கொல்லி காலனியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர். இக்கிராமத்தில் பள்ளி, அங்கன்வாடி மையம் இல்லாததால், 3 கி.மீ. தூரத்தில் உள்ள கொல்லாலகுப்பம், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலை சார்பில் தச்சூர் முதல் சித்தூர் வரை எட்டுவழி சாலைப் பணிகளுக்காக காட்டுக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் மலைப்பகுதியில் எட்டு வழிச்சாலை திட்ட அலுவலகம், தளவாடம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் அறைகள், கட்டப்பட்டதால் மலை கிராமத்திற்கு பொதுமக்கள் சென்று வரும் சாலை அடைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் வேலைக்கு சென்று வரவும், மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சாலையில்லாத காட்டுப்பகுதி வழியாக சென்றுவரும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும், கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரவும் முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×