search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, நரசிபுரம் பகுதியில் குறித்த நேரத்தில் பஸ்கள் வராததால் மாணவர்கள் அவதி
    X

    தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, நரசிபுரம் பகுதியில் குறித்த நேரத்தில் பஸ்கள் வராததால் மாணவர்கள் அவதி

    • விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை
    • போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

    கோவை,

    கோவை மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் தலைமை அலுவலக டெப்போ, ஒண்டிப்புதூர், சுங்கம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூருக்கு எண்ணற்ற அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாநகர அளவில் காந்திபுரம், டவுன்ஹால், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இருந்து தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் மேற்கண்ட அரசு பஸ்கள் சரியான நேரத்தில் குறித்த காலத்தில் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

    மேலும் நரசிபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த தக்காளி, கத்தரிக்காய், கீரை வகைகள் ஆகியவற்றை அரசு பஸ்கள் மூலம் உழவர் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வது வழக்கம்.

    ஆனால் மேற்கண்ட பகுதிகளில் அரசு பஸ்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் சரிவர இயக்கப்படுவது இல்லை. எனவே விவசாயிகள் தோட்டத்தில் உள்ள விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்வது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்து உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோவை போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்து உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிய நேரத்தில் விளைபொருட்களை கொண்டு செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு பஸ் போக்குவரத்து குறித்த நேரத்தில் வராததால் பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தற்போது கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×