திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தேவர் ஜெயந்திக்கு செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் எஸ்.பி தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுரை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை நடைபெறுகிறது.ராமநாதபுரத்திற்கு செல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் எடுத்துரைத்தார்.
மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Published on

குள்ளனம்பட்டி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை நடைபெறுகிறது. இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் எடுத்துரைத்தார்.

அவர் பேசுகையில்,தற்போது அமலில் உள்ள தடைஉத்தரவின்படி பசும்பொன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், டிராக்டர், ஆட்டோ, டாடாஏசி போன்ற வாகனங்கள் மூலமாகவும், திறந்தவெளி வாகனங்களில் செல்லவும் அனுமதி கிடையாது.

சொந்த 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் மட்டுமே உட்கோட்ட அலுவலகங்களில் முன்அனுமதி பெற்று செல்லலாம். சொந்த வாகனத்தில் செல்வோர் உரிமையாளர் பெயர், அதில் பயணம் செய்பவர்கள், வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் போன்ற விபரங்களை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அங்கு தரப்படும் அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.

வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச்செல்ல கூடாது. சாதி உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ அனுமதி கிடையாது.

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகனத்தின் உரிமையாளர் தணிக்கையின்போது கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தில் ஆயுதங்கள், மதுபானங்கள் எடுத்துச்செல்ல கூடாது. வழியோரங்களில் வெடிகள் போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களினால் அனுமதிசீட்டு பெறாத வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் வழங்கப்படும் அனுமதி சீட்டை வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.

பிற மாவட்டங்களில் இருந்து செல்லும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். தலைவர்களுடன் செல்லும்போது 3 வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும்.

அலங்கார ஊர்தி, அணிவகுப்பு, மாட்டு வண்டியில் செல்லுதல், சாதி தலைவர்களின் வேடம் அணிந்து செல்லுதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. வருகிற 30-ந்தேதி மட்டும் அவர்களது சொந்த ஊரில் புகைப்படம் எடுத்து மாலை அணிவித்து மரியாதை செய்யலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com