search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 நடன பயிற்சியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை
    X

    3 நடன பயிற்சியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை

    • பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    திருவான்மியூர் கலாஷேத்ராவில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவிகள் பலர் கலாஷேத்ராவில் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்து வாக்குமூலம் அளித்தனர். இதனை மகளிர் ஆணையம் அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் வழங்கி உள்ளது.

    அந்த அறிக்கையில் கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வெளியில் உள்ள நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நடன பயிற்சியாளர்களான ஸ்ரீநாத், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே மாணவிகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். இந்த நிலையில் மகளிர் ஆணையம் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீதும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கைது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இதன் முடிவில் 3 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.

    Next Story
    ×